காசு கடவுளான பின்
கடவுளுக்கு
இங்கு என்ன வேலை?
இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு
இல்லாமலே போய்விடு?
பொய்யான நம்பிக்கை தந்து
புதைத்து விடாதே
துரோகத்தில்!
காலை எழுவதில் இருந்து
இரவு உறங்கச் செல்லும் வரை
துணை நீ என்று
தூணாகப் பற்றும் நம்பிக்கைகளைத்
தூக்கி எறியலாகுமோ கடவுளே?
ஓரவஞ்சனை உனக்கும் கூடத்தான்
கருமிக்கு கணக்கில்லாத சொத்துபத்துகள்
வள்ளல்களுக்கு வறுமை வாழ்க்கை!
மரமரமாய் சுற்றி,
கோவில் கோவிலாய்
ஏறி இறங்கி
வேண்டாத வேண்டுதலையும்
கணக்கில்லா பரிகாரங்களையும்
வைப்பவற்கு வழங்கிடாத
மழலை வரத்தை,
மனங்கெட்டு திரியும் வேசிகளுக்கு வழங்கி
வீதியில் வீசிடச் செல்லும்
விதியை வழங்குவது எதற்கு?
வரமாய் கிடைத்த மழலையைக்
காக்கத் துப்பின்றி
தன்னோடு தற்கொலைக்கு
துணையாகக் கொண்டுச் செல்லும்
கோழைகளுக்கு வழங்குவது எதற்கு?
குணவதிகளுக்கு பொல்லாத் துணையும்
குணவான்களுக்கு பொருந்ததாத் துணையும்
சேர்த்து வைத்து
சின்னபின்னா வாழக்கையை
வழங்கியது எதற்கு?
போட்டுக்கொண்டே சென்றால்
பட்டியல்தான் நீளுமே?
இனியாவது மாற்றிக்கொள்
உனது அறத்தை?
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்
No comments:
Post a Comment