கடலெனும் காதலி - கதிரெனும் காதலன்
ஓயாத அலைச் சத்தத்தில்
அழைக்கும் என்னை...
ஒளிக்கதிர்களால் விழுங்குகிறேன் நாள்தோறும் உன்னை!
பரவையெனப் பெயரைத் தாங்கியதால்
பரந்த மனதை இப்படியா காட்டுவது?
ஒற்றைப் புள்ளியாய் உற்றுநோக்குகிறேன்
கற்றைக் கதிர்களால் கட்டியணைக்கிறேன்...
விலகி நின்று காண்பவர்க்கு
நெருங்கித்தான் இருக்கின்றோம்...
நெருங்கி வந்து காண்பவர்க்கு
விலகியே நிற்கின்றோம்!
ஆழியெனப் பெயரைத் தாங்கியதால்
ஆழமான மனதை இப்படியா மறைப்பது?
கிசுகிசுவில் விழுந்துவிடக் கூடாதடி
நமது இரகசியக் காதல்!
பசபசவென பசைபோல் ஒட்டிக்கொண்டோம்
பக்கத்தில் யாரும் அறியாமலே!
இராப்பொழுது வானில் நிழலை விட்டு
மாராப்புத் தண்ணீரில் மறைந்து போகிறேன்...
வீராப்பு எல்லாம் நமக்கெதற்கு
நீராடிக் குளிக்கின்றேன் நீராட்டு என்னை!
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்
No comments:
Post a Comment